வியாழன், 3 நவம்பர், 2011

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்

கர்நாடக இசை உலகில் சங்கீத மும்மணிகள் எனச் சிறப்பித்துக் கூறப்படும் வாக்கேயக்காரர்களில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளும் ஒருவர். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்திகளுமே சோழவள நாட்டுத் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது ஓர் அதிசயமே. இவர் சித்திரபானு வருடம், சித்திரை மாதம் 17ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரம், திங்கட்கிழமை (26.4.1762) அன்று பிறந்தார். பிறந்த நட்சத்திரத்தை அநுசரித்து இவருக்கு பெற்றோரால் வெங்கட சுப்பிரமண்யன் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் செல்லமாக சியாமகிருஷ்ணன் என்றே அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே பின்னால் நிலைத்துவிட்டது.

இவரது முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து வந்து காஞ்சியில் குடியேறிய வடதேசத்து வடமாளைச் சேர்ந்தவர்கள். காஞ்சி க்ஷேத்திரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயத்தில், பிரம்ம தேவர் தவம் செய்து தேவியின் அனுக்கிரகத்தைப் பெற்று அங்கு பங்காரு காமாக்ஷியை ஸ்தாபிதம் செய்தார். அத்திரு உருவம் துர்வாஸ முனிவரால் பூஜிக்கப்பட்டதாகவும் ஐதீகம் உள்ளது. ஸ்ரீ ஆதிசங்கரர் காஞ்சித் தலத்திற்கு விஜயம் செய்தபோது ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்தை விரிவுபடுத்தி புனருத்தாரணம் செய்து பங்காரு காமாக்ஷிக்கு ஆகம விதிப்படி பூஜை நடத்தி வர சியாமா சாஸ்திரிகளின் முன்னோர் ஒருவரை நியமித்தார். அதிலிருந்து அக்குடும்பத்தவரே பங்காரு காமாக்ஷிக்குப் பரம்பரையாக பூஜை செய்து வருகிறார்கள். பாரதத்தின் மீது படையெடுத்துக் கோயில்களை நாசப்படுத்தி, கொள்ளையடித்த அந்நியர்கள் காஞ்சியை நோக்கி வந்தபோது, சாஸ்திரிகளின் குடும்பம் பங்காரு காமாக்ஷியின் விக்ரஹத்துடன், தெற்கு நோக்கிப் புறப்பட்டது. செஞ்சி, உடையார்பாளையம், விஜயபுரம் முதலிய சமஸ்தானங்களில் சில காலம் இருந்துவிட்டு 1781ஆம் ஆண்டு தஞ்சாவூர் வந்து இரண்டாம் துளஜாஜி மன்னரின் ஆதரவில் தங்கினார்கள். 1785ஆம் ஆண்டு பங்காரு காமாக்ஷி அம்மனுக்குக் கோயில் கட்டப்பட்டு வழக்கமான முறையில் பூஜைகள் தொடங்கி நடத்தப்பட்டன.

சியாமா சாஸ்திரிகளின் முன்னோர்கள் யாரும் சங்கீத வித்வான்களாக இருந்ததாகத் தெரியவில்லை. சிறுவயது முதலே சியாமா சாஸ்திரிகள் ஸமஸ்க்ருதம், தெலுங்கு இவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது 18ஆவது வயதில் திருவாரூரில் தங்கி இருந்த பெற்றோர், தஞ்சைக்குக் குடிபெயர்ந்தார்கள். தனது தாய்மாமனிடம் சிறிதுகாலம் சங்கீதப் பயிற்சி பெற்றார் சாஸ்திரிகள்.

பின்னொரு நாள், தமது அபார சங்கீத ஞானத்தால் சங்கீத ஸ்வாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த யதிசிரேஷ்டர் ஒருவர் தஞ்சைக்கு விஜயம் செய்தார். சாதுர் மாஸ்யத்தை முன்னிட்டு அவர் நான்கு மாத காலம் அங்கேயே தங்க நேரிட்டது. சாஸ்திரிகளின் தந்தை விஸ்வநாத ஐயர் அவரை ஒரு நாள் தம் இல்லத்திற்கு ‘பிக்ஷை’க்கு அழைத்தார்.

பிக்ஷை முடிந்து, புறப்பட இருந்தபோது சிறுவன் சியாமா சாஸ்திரிகளை அவர் உற்று நோக்கினார். ‘உத்தமமான சிஷ்யர் ஒருவர் நமக்குக் கிடைத்தார்’ என அவர் மனத்தில் தோன்றிவிட்டது. சிறுவனைத் தாம் தங்கியிருந்த இடத்துக்குத் தினமும் வரச்சொல்லி சாஸ்த்ரீய, சங்கீதத்தின் தத்துவங்களை, தாள கதி, நடை பேதங்களின் கிரமங்கள், மற்றும் பிரஸ்தாரங்களின் நுட்பங்களை விரிவாகக் கற்றுக்கொடுத்தார். தஞ்சையைவிட்டுப் புறப்படுமுன் தன்னிடமிருந்த அரிய இசைச் சுவடிகளை, சியாம கிருஷ்ணரிடம் கொடுத்து ‘பச்சிமிரியம் ஆதியப்பய்யரிடம் சென்று சங்கீதம் கற்றுக்கொள்ள’ என்று உபதேசித்து அருளினார்.

தஞ்சை சமஸ்தான வித்வானாக இருந்த ஆதியப்பய்யர் ‘தானவர்ணமார்க்க தரிசி’ என்ற பிருதுவுடன் விளங்கியவர். சியாமா சாஸ்திரிகளை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு சங்கீதத்தின் அதிநுட்பமான விஷயங்களையும், ராகங்கள், கமகங்களின் மர்மங்களையும் அடிக்கடிப் பாடியும், வீணையில் இசைத்தும் கற்பித்தார். அதன் பிறகு சாஸ்திரிகள் தாமே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். அவை ஒவ்வொன்றும் ராக பாவம் ததும்பும் ரத்தினங்களாக அமைந்தன. ஸமஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றில் கிருதிகளை இயற்றிய அவர், தமிழிலும் பல உருப்படிகளை அமைத்துள்ளார். இவரது கிருதிகளின் அமைப்பு, தான வர்ணங்களின் நடைகள், ஸ்வர ஜதிகளின் மேம்பாடு ஆகியவற்றைக் கேட்டு வித்வான்கள் பெரிதும் பாராட்டினார்கள். தெய்வப் புலமைமிக்க வாக்கேயக்காரர் எனப் பலரும் கொண்டாடினார்கள். இவரது புகழ் பல இடங்களிலும் பரவத் தொடங்கியது. மகனீயர் தியாகராஜ ஸ்வாமிகள் இவர் காலத்தவரே. திருவையாற்றில் அவர் இருந்தபோது சாஸ்திரிகள் அங்கு சென்று தான் இயற்றிய புதிய கிருதிகளைப் பாடிக்காட்டுவார். தியாகராஜ ஸ்வாமிகளும் சியாமா சாஸ்திரிகளும் சந்திக் கையில் பொழுதுபோவது தெரியாமல் சங்கீத விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பார்களாம். வெள்ளிக் கிழமைகள், பிற விசேஷ நாட்களில் சாஸ்திரிகள் பங்காரு காமாக்ஷியின் சன்னதியில் அமர்ந்து நெடுநேரம் தியானம் செய்வார். அவர் வாக்கினின்றும் பல கிருதிகள் வெள்ளம் போன்று அப்போது பிரவகிக்கும். ஒருமுறை அவர் புதுக்கோட்டை சென்றிருந்தபோது ஒரு பெரியவர் ‘தாங்கள் மதுரை சென்று ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் பெயரில் கிருதிகளை இயற்ற வேண்டும்’ எனக் கூறினார். சரியென்று சொன்ன சாஸ்திரிகள் நவரத்தின மாலிகை என்ற பெயரில் சில கிருதிகளை இயற்றிவிட்டுப் பிற்பாடு அதனை மறந்துவிட்டார். பிறகு ஒரு நாள் அவரது சொப்பனத்தில் அதே மனிதர் தோன்றி ‘சாஸ்திரிகளே மீனாக்ஷி அம்மனை மறந்துவிட்டீர்களா?’ எனக் கேட்டுவிட்டு மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த சாஸ்திரிகள் உடனேயே ஸ்ரீ மீனாக்ஷி அம்மனைத் தியானம் செய்து நவரத்ன மாலிகையைப் பூர்த்திசெய்தார்.

பின்னர் மதுரைக்குச் சென்று ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் சன்னதியில் அந்த நவரத்ன மாலிகையை பாடி தேவிக்குச் சமர்ப்பித் தார். அம்மன் முன் அமர்ந்து அவர் ‘ஸரோஜ தள நேத்ரி’ கிருதியிலிருந்து தொடங்கி நான்கு பாடல்களைப் பாடி முடித்தவரை அங்கிருந்தவர்கள் அவரைச் சியாமா சாஸ்திரிகள் என்று அறியவில்லை. யாரோ வித்வான் பாடுகிறார் என்றே எண்ணினார்கள். உடன் வந்திருந்த அலசூர் கிருஷ்ணய்யர் மூலம் அவர்தான் பிரசித்தி பெற்ற சியாமா சாஸ்திரிகள் என்று அறிந்துகொண்ட பிறகு, அவருக்கு கோவில் மரியாதைகள் செய்து கௌரவித்தார்கள். பிறகு அவர் தஞ்சை திரும்பினார். இன்றைக்கும் சியாமா சாஸ்திரிகள் குடும்பத்து வழி வந்தவர்களுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன.

65 வயது வாழ்ந்த சியாமா சாஸ்திரிகள் ‘பாலிஞ்சு காமாட்சி’ போன்று காமாக்ஷி அம்மன்மீதும், ஸ்ரீ மீனாக்ஷி அம்மன்மீது பாடிய நவரத்தின மாலிகா கிருதிகளும் தவிர திருவையாறு, திருவானைக்கோவில், நாகப்பட்டிணம் முதலிய ஸ்தலங்களுக்கும் சென்று அங்குள்ள அம்மன்கள்மீதும் பாடல்கள் இயற்றியிருக்கிறார். மொத்தம் இவர் இயற்றியது சுமார் 300 கிருதிகள் இருக்கும்.

ஒரு சமயம் தஞ்சை சமஸ்தானத்தில் ‘பூலோக சாப கட்டி பொப்பிலி கேசவையா’ என்ற வித்வானுடன் இவர் ஒரு சங்கீதப் போட்டியில் ஈடுபட நேர்ந்தது. கேசவையா, ஸிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். சாஸ்திரிகள் அதைக் கிரகித்து உடனே திரும்பப் பாடி, சரபநந்தன தாளத்தில் புதிதாக ஒரு பல்லவியை பாடி அந்தப் போட்டியில் வெற்றி ஈட்டினார். இவரது சிஷ்யர்களில் ஸ்ரீ ஸுப்பராய சாஸ்திரிகள், அலஸுர் கிருஷ்ணய்யர், நாதஸ்வர வித்வானான தாஸரி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

நன்றி: தெய்வீகப் பொருட்பக்கங்கள், டிசம்பர் 2001