திங்கள், 14 நவம்பர், 2011

சங்கீத பூஷணம் திருமதி அக்னஸ் இராசம்மா மரியாம்பிள்ளைகரவெட்டியைச் சேர்ந்த சங்கீத பூஷணம் திருமதி அக்னஸ் இராசம்மா மரியாம்பிள்ளை இந்து கலாசார அமைச்சினால் 1998 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்



கரவெட்டியைச் சேர்ந்த சங்கீத பூஷணம் திருமதி அக்னஸ் இராசம்மா மரியாம்பிள்ளை இந்து கலாசார அமைச்சினால் 1998 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீதம் கற்று சங்கீத பூஷணம் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து முதன் முதலாக சங்கீத பூஷணம் பட்டத்தை இந்தியாவில் பெற்ற முதல் கத்தோலிக்க தமிழ்ப் பெண்மணி இவர் என்பதும் சிறப்பான ஒரு விடயமாகும்.

சங்கீதம் இன்று ஒரு முக்கிய பாடமாகி பட்டப்படிப்பு வரை வந்துள்ளது. இசை ஞானம், குரல் வளம் இருப்பவர்கள் சுலபமாகப் படிக்கலாம். அதனால் ஆரம்ப வகுப்புகளில் இருந்து சங்கீதத்தை முறையாகக் கற்க வேண்டும். யாழ்பாணத்தில் பல இசைக்கலைஞர்கள் ஒரு காலம் இருந்தனர். மிருதங்க வித்துவான, வயனின் வித்துவான், தவில் வித்துவான் என்று பல்வேறு கலைஞர்கள் இருந்த இடத்தில் இன்று இவ்வாறான கலைஞர்கள் அருகிப்போய் விட்டனர். காரணம் நாட்டு நிலைமை. இவ்வாறான கலைஞர்கள் தோற்றம் பெறுவதற்கு இங்குள்ள மத நிறுவனங்கள், பெரியார்கள் உதவ வேண்டும் என 1999 ஆம் ஆண்டு பத்திரிகை நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

இவர் சிறு வயதாக இருக்கும்போது பாடல்களைக் கேட்டு இரசித்ததுடன் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது சங்கீதம் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நெல்லியடி நாதஸ்வர வித்துவான் கு.பெரியசாமி என்பவரிடம் ஆர்மோனியத்துடன் முறைப்படி சங்கீதத்தைக் கற்க ஆரம்பித்தார். பாடசாலையில் படிக்கும் காலத்தில் வருடந்தோறும் நடைபெறும் சுகாதார, கல்வி விழாக்களில் தனிப் பாடல்களைப் பாடி பரிசில்கள் பெற்ற இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டு இறுதி வருட பரீட்சையில் சங்கீதப் பாடத்தில் சித்தியடைந்தார்.

மேலும் (1947 - 1948 ) ஆசிரிய கலாசாலையில் மாணவியாக இருந்தபோது யாழ்ப்பாண நகர மண்டபம், அநுராதபுரம் சிற்றம்பலம் மண்டபம் என்பவற்றில் சுத்ந்திர சூரியன் உதித்திட்ட வேளை.. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி பலராலும் பாரட்டப்பட்டவர். அதுமாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வெண்பா, விருத்தம், கீர்த்தனைப் பாடல் போட்டிகளிலும் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்.

கோப்பாய ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இறுதியாண்டுப் பரீட்சையில் தேறிய இவர், ஆசிரியையாக கத்தோலிக்கப் பாடசாலையில் நியமனம் பெற்றார். இவர் கத்தோலிக்க ஆசிரியையாக இருந்தாலும் இந்துமதப் பிள்ளைகள் இவரிடம் தேவாரம் படிப்பார்கள். கூடவே சங்கீதமும் கற்பார்கள். இவர் ஆசிரியையாக இருந்தபோது, யாழ்ப்பாணத்தில் சங்கீதத்தில் உயர் கல்வி கற்க பல்கலைக்கழகங்கள் இருக்கவில்லை. எனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல இலங்கையில் இருந்தும் பலர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றனர்.

பலாலி - திருச்சி விமான சேவை, தலைமன்னார் - தனுஷ்கோடி கப்பல் சேவை இருந்த காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து, நேர்முகப் பரீட்சையிலும் தெரிவாகி ஆசிரியையாகி 6 வருடங்களுக்குப் பின்னர் இந்தியா சென்று தனது சங்கீதக் கல்வியைத் தொடர்ந்தார். கத்தோலிக்கப் பாடசாலையின் பொது முகாமையாளர் வழங்கிய சம்பளமற்ற 4 வருட காலப்பகுதியில் இவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். படிக்கும் காலத்தில் 3 ஆம் ஆண்டும், 4 ஆம் ஆண்டும் வாய்ப்பாட்டிற்கு இவருக்குப் புலமைப் பரிசில் கிடைத்ததுடன் ஈழநாட்டு மாணவர் மன்றத்தின் உப தலைவராகவும் இவர் செயலாற்றினார்.

1960 ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கீத பூஷணம் இறுதி ஆண்டுப் பரீட்சையில் இவர் எழுதிய அறிமுறை சங்கீத சாஸ்திரவிடைப் பத்திரம் மிக பாராட்டுப்பெற்றதுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் வாத்திய கூட்டிசை நிகழ்ச்சியில் இவர் ஆர்மோனியம் வாசித்த பாங்கு அனைவரையும் கவர்ந்ததுடன் பலர் சிறந்த ஞானமுடைய உமக்கு வாத்தியம்தான் உமது சங்கீதத்துக்கு உறுதுணை எனப் பாராட்டினார்கள்.

சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து சங்கீத ஆசிரியையாகவே குருநகர் சென்.றோக். றோ.க. பாடசாலை, சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றினார். அத்துடன் யா/சுண்டுக்குளி நாடகக் கலா மன்ற போஷகராகவும் இருந்துள்ளார்.

1966 இல் பண்டாரவளை சிறுமலர் உயர்தர் மகளிர் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற இவர் அங்கு தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் இசையை மாணவர்களுக்கு ஊட்டினார் என்றால் அது மிகையாகாது. அதன் பின்னர் இவர் கற்ற, கற்பித்த கரவை திரு இதயக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார்.