ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு

இரண்டுக்கும் பொதுவானவை
7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு

ஆரம்ப அப்பியாச வகைகள்

கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் மாயாமாளவகெளளை இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் பலடாஸ் என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.

உருப்படிகள்

கருநாடக சங்கீதத்தில் உள்ளவாறு ஏராளமான உருப்படி வகைகளோ தள வகைகளோ இராகங்களோ இந்துஸ்தானி சங்கீதத்தில் கிடையாது. கான காலத்திற்கேற்பவே இராகங்களைப் பாடும் முறை இந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், கர்நாடக இசையிலோ இம்முறை அருகி வருகின்றது. கர்நாடக இசையில் கமகங்கள், பிருகாக்கள் என்பன மிக முக்கியமான அம்சங்களாகும். கமகம் என்னும் அம்சம் இந்துஸ்தானி சங்கீதத்தில் காணப்படுகின்ற போதும் அவை லேசான ஏற்ற ஜாரு, இறக்க ஜாரு வகையிலான கமகங்களாகும்

பாடும் முறை

இராகம் பாடும் முறையில் இரு இசைகளுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. இந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனை விஸ்தாரமாக நீண்ட நேரம் பாடப்படுகிறது. நீண்ட நேரம் மந்த்ர ஸ்தாயியில் சஞ்சாரம் செய்த பின்னரே படிப்படியாக மத்யஸ்தாயி, மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்வர்.
சாதாரணமாக ஹிந்துஸ்தானி கச்சேரியில் 2, 3 இராகங்களே பாடப்படுகின்றன. ஆனால், கர்நாடக சங்கீதத்தில் 3 மணி நேரக் கச்சேரியில் 10-15 உருப்படி வகைகள் பாடப்படுகின்றன. கர்நாடக சங்கீதக் கச்சேரியின் ஆரம்பத்தில் வர்ணம், பஞ்சரத்ன கீர்த்தனை, துரிதகால கீர்த்தனைகள் என்பன கச்சேரி களை கட்டுவத்ற்காகப் பாடப்படுகின்றன. இந்துஸ்தானி கச்சேரி பெரும்பாலும் ஆலாபனையுடனேயே ஆரம்பமாகிறது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் ஓர் இராகத்தில் ஒரு உருப்படியே பாடப்படுதல் வழக்கமாகும். ஆனால், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரே இராகத்திலேயே விளம்ப லய உருப்படி, துரித லய உருப்படி என்பன பாடப்படுகின்றன

பக்க வாத்தியங்கள்

கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பக்க வாத்தியமாக வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங், கஞ்சிரா போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும். பிரதானமான இராகம், கிருதி, பல்லவி பாடப்பட்ட பின் தனி ஆவர்த்தனம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் இந்துஸ்தானி இசையில் சுருதிக்காக தம்புராவும் , தாளத்திற்காக தபேலாவும் மாத்திரமே வாசிக்கப்படும். தனி ஆவர்த்தனத்திற்கு இவ்விசையில் இடம் இல்லை. கர்நாடக இசையின் பாதிப்பினால் ஹிந்துஸ்தானி இசை கச்சேரிகளில் இப்போது வயலின் வாசிக்கப்படுகிறது

பிற

கர்நாடக-ஹிந்துஸ்தானி சங்கீதங்களுக்கு இடையிலான ஒற்றுமை-வேற்றுமை
கர்நாடக சங்கீதத்தில் கையினால் தாளம் இடுவது போன்று ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கையினால் தாளம் போடுவதில்லை. தபேலாவில் வாசிக்கப்படும் டேக்கா (ஜதி) ஒட்டியே பிரதானமாக பாடுபவர் பாடவேண்டும் அல்லது பக்கவாத்தியம் வாசிப்பவர் வாசிக்க வேண்டும். ஆகையினால் ஹிந்துஸ்தானி இசையில் தபேலா வாசிப்பு முறையை பாடகர், வாத்திய இசை விற்பன்னர் யாவரும் அறிந்திருத்தல் அவசியம்.
ஹிந்துஸ்தானி இசையில் கற்பனாஸ்வரம் பாடும் முறை மிகக் குறைவாகும்.கீர்த்தனை, கிருதியில் உள்ள பல்லவி, அனுபல்லவி போன்ற அங்க வேறுபாடுகளை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஸ்தாயியில், அந்தரா எனக் கூறுவர்.
கஸல் என்னும் ஹிந்துஸ்தானி உருப்படி வகை கர்நாடக சங்கீதத்தில் ஜாவளிக்கு ஒப்பானது. தும்ரி என்பது பதத்த்ற்கும், தரானா என்பது தில்லானாவுக்கும் ஒப்பானது.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பலவித கரானாக்கள், அதாவது குருகுல முறைகள் உண்டு. ஒவ்வொரு கரானாவும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவதாக அமகின்றது. உ+ம்: கவாலியர், ஆக்ரா, ராம்பூர், பெனாரஸ்
தென்னிந்தியாவிலும் கேரளாப் பாணி, ஆந்திராப் பாணி என்றிருந்தாலும் ஹிந்துஸ்தானி சங்கீத கரானாக்களைப் போன்று அதிக வேறுபாடில்லை. ஒரே உருப்படி வகைகளே தென்னிந்தியா எங்கும் பாடபடுகின்றன.
மந்த்ரஸ்தாயி, மத்யஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் 3 ஸ்தாயிகளும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மந்த்ரசப்தக, மத்யசப்தக, தாரசப்தக என அழைக்கப்படுகின்றன.
தாய் ராகங்களை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் "தாட்" என அழைப்பர். தாட் ராகத்திற்கான அம்சங்கள்: 1. 7 ஸ்வரங்களையும் கொண்டிருத்தல் 2. ஸ்வரங்கள் கிரமகதியில் செல்லுதல் 3. ஒரே ஸ்வரத்தின் கோமள, தீவிர பேதம் இரண்டும் அடுத்தடுத்து தாட்டில் வரலாம். 4. தாட் ஆரோகணத்தை மட்டும் கொண்டதாகும். உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ் (கரகரப்பிரியா) காபிதாட்டைக் குறிக்கும். 5. தாட் ரஞ்சகத்தை அளிக்க வேண்டிய அவசியமில்லை. 6.ஒவ்வொரு தாட்டும் அத்தாட்டிலிருந்து பிறக்கும் ராகத்தின் பெயரைக் கொண்டு விளங்கும். உ+ம்: காபிதாட் அதிலிருந்து பிறந்த பிரபல்யமான காபியின் பெயரைக் கொன்டு அழைக்கப்படுகிறது ஹிந்துஸ்தானியில் இவ்வாறான 10 தாட்கள் உண்டு. இவற்றிலிருந்தே இரகங்கள் பிறக்கின்றன.
கர்நாடக சங்கீதத்தில் உள்ள போன்றே இராகங்கள் ஒளடவ, ஷாடவ, சம்பூர்ண என ராகங்களில் உள்ள ஸ்வரங்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து பிரிக்கப் படுகின்றன. ஒளடவ ராகம்: பூபாலி, ஹிந்தோளம் ஷாடவ ராகம்: மார்வா, பூர்யா சம்பூர்ண ராகம்: யமன், பிலாவல்
கர்நாடக சங்கீதம் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் பாடகர் தம் குரலுக்கு உகந்த சுருதியை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் தம்புராவை சுருதி கூட்டும் போது பஸஸஸ என்று கூட்டப்படுகிறது. ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் அவ்வாறே.
கர்நாடக சங்கீதத்தைப் போல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் 7 ஸ்வரங்களும் கோமள, தீவிர பேதத்தினால் 12 ஸ்வரஸ்தானங்களாகின்றன.
இரு சங்கீதங்களிலும் மனோதர்மம் இன்றியமையாததாகும். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனையை "ஆலாப்" என்றழைப்பர். ஆலாப் 4 பிரிவுகளாகப் பாடப் படுகிறது. 1. ஸ்தாயி 2. அந்தரா 3. ஸஞ்சாரி 4. ஆபோக்
ஜோட் என்பது ஆலாபனையை மத்திம காலத்தில் பாடுவதாகும். இது ஓரளவு கர்நாடக சங்கீதத்தில் தானம் பாடும் முறைக்கு ஒத்ததாகும்

புதன், 24 பிப்ரவரி, 2010

இசைக்கு ஒரு அறிமுகம்

இசைக்கு ஒரு அறிமுகம் இசைக்கு ஒரு அறிமுகம்::
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில் (Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம். இசை என்ற வார்த்தைக்கு, மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும். எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால் இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!

இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம். அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில் மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.

இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும் பரிணமித்தது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010