புதன், 24 பிப்ரவரி, 2010

இசைக்கு ஒரு அறிமுகம்

இசைக்கு ஒரு அறிமுகம் இசைக்கு ஒரு அறிமுகம்::
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில் (Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம். இசை என்ற வார்த்தைக்கு, மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும். எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால் இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!

இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம். அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில் மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.

இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும் பரிணமித்தது.