திங்கள், 14 நவம்பர், 2011

ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்!


தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் (இன்று) தொடங்குகிறது.

மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.

÷தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.

திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி ரசிக ரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார்.

அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.

ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.

1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.

1934-ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.

அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.

÷திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.

÷அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸôரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், "சினிமா தூது' என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.

÷திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸôர் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்' என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.

1944 நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

1944 நவம்பர் 27-ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.

சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன்மீது மேலும் லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.

அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது: இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.

இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.

முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.

நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார்.

பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.

எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959-ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.

சங்கீத பூஷணம் திருமதி அக்னஸ் இராசம்மா மரியாம்பிள்ளைகரவெட்டியைச் சேர்ந்த சங்கீத பூஷணம் திருமதி அக்னஸ் இராசம்மா மரியாம்பிள்ளை இந்து கலாசார அமைச்சினால் 1998 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்



கரவெட்டியைச் சேர்ந்த சங்கீத பூஷணம் திருமதி அக்னஸ் இராசம்மா மரியாம்பிள்ளை இந்து கலாசார அமைச்சினால் 1998 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீதம் கற்று சங்கீத பூஷணம் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து முதன் முதலாக சங்கீத பூஷணம் பட்டத்தை இந்தியாவில் பெற்ற முதல் கத்தோலிக்க தமிழ்ப் பெண்மணி இவர் என்பதும் சிறப்பான ஒரு விடயமாகும்.

சங்கீதம் இன்று ஒரு முக்கிய பாடமாகி பட்டப்படிப்பு வரை வந்துள்ளது. இசை ஞானம், குரல் வளம் இருப்பவர்கள் சுலபமாகப் படிக்கலாம். அதனால் ஆரம்ப வகுப்புகளில் இருந்து சங்கீதத்தை முறையாகக் கற்க வேண்டும். யாழ்பாணத்தில் பல இசைக்கலைஞர்கள் ஒரு காலம் இருந்தனர். மிருதங்க வித்துவான, வயனின் வித்துவான், தவில் வித்துவான் என்று பல்வேறு கலைஞர்கள் இருந்த இடத்தில் இன்று இவ்வாறான கலைஞர்கள் அருகிப்போய் விட்டனர். காரணம் நாட்டு நிலைமை. இவ்வாறான கலைஞர்கள் தோற்றம் பெறுவதற்கு இங்குள்ள மத நிறுவனங்கள், பெரியார்கள் உதவ வேண்டும் என 1999 ஆம் ஆண்டு பத்திரிகை நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

இவர் சிறு வயதாக இருக்கும்போது பாடல்களைக் கேட்டு இரசித்ததுடன் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது சங்கீதம் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நெல்லியடி நாதஸ்வர வித்துவான் கு.பெரியசாமி என்பவரிடம் ஆர்மோனியத்துடன் முறைப்படி சங்கீதத்தைக் கற்க ஆரம்பித்தார். பாடசாலையில் படிக்கும் காலத்தில் வருடந்தோறும் நடைபெறும் சுகாதார, கல்வி விழாக்களில் தனிப் பாடல்களைப் பாடி பரிசில்கள் பெற்ற இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டு இறுதி வருட பரீட்சையில் சங்கீதப் பாடத்தில் சித்தியடைந்தார்.

மேலும் (1947 - 1948 ) ஆசிரிய கலாசாலையில் மாணவியாக இருந்தபோது யாழ்ப்பாண நகர மண்டபம், அநுராதபுரம் சிற்றம்பலம் மண்டபம் என்பவற்றில் சுத்ந்திர சூரியன் உதித்திட்ட வேளை.. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி பலராலும் பாரட்டப்பட்டவர். அதுமாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வெண்பா, விருத்தம், கீர்த்தனைப் பாடல் போட்டிகளிலும் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்.

கோப்பாய ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இறுதியாண்டுப் பரீட்சையில் தேறிய இவர், ஆசிரியையாக கத்தோலிக்கப் பாடசாலையில் நியமனம் பெற்றார். இவர் கத்தோலிக்க ஆசிரியையாக இருந்தாலும் இந்துமதப் பிள்ளைகள் இவரிடம் தேவாரம் படிப்பார்கள். கூடவே சங்கீதமும் கற்பார்கள். இவர் ஆசிரியையாக இருந்தபோது, யாழ்ப்பாணத்தில் சங்கீதத்தில் உயர் கல்வி கற்க பல்கலைக்கழகங்கள் இருக்கவில்லை. எனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல இலங்கையில் இருந்தும் பலர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றனர்.

பலாலி - திருச்சி விமான சேவை, தலைமன்னார் - தனுஷ்கோடி கப்பல் சேவை இருந்த காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து, நேர்முகப் பரீட்சையிலும் தெரிவாகி ஆசிரியையாகி 6 வருடங்களுக்குப் பின்னர் இந்தியா சென்று தனது சங்கீதக் கல்வியைத் தொடர்ந்தார். கத்தோலிக்கப் பாடசாலையின் பொது முகாமையாளர் வழங்கிய சம்பளமற்ற 4 வருட காலப்பகுதியில் இவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். படிக்கும் காலத்தில் 3 ஆம் ஆண்டும், 4 ஆம் ஆண்டும் வாய்ப்பாட்டிற்கு இவருக்குப் புலமைப் பரிசில் கிடைத்ததுடன் ஈழநாட்டு மாணவர் மன்றத்தின் உப தலைவராகவும் இவர் செயலாற்றினார்.

1960 ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கீத பூஷணம் இறுதி ஆண்டுப் பரீட்சையில் இவர் எழுதிய அறிமுறை சங்கீத சாஸ்திரவிடைப் பத்திரம் மிக பாராட்டுப்பெற்றதுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் வாத்திய கூட்டிசை நிகழ்ச்சியில் இவர் ஆர்மோனியம் வாசித்த பாங்கு அனைவரையும் கவர்ந்ததுடன் பலர் சிறந்த ஞானமுடைய உமக்கு வாத்தியம்தான் உமது சங்கீதத்துக்கு உறுதுணை எனப் பாராட்டினார்கள்.

சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து சங்கீத ஆசிரியையாகவே குருநகர் சென்.றோக். றோ.க. பாடசாலை, சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றினார். அத்துடன் யா/சுண்டுக்குளி நாடகக் கலா மன்ற போஷகராகவும் இருந்துள்ளார்.

1966 இல் பண்டாரவளை சிறுமலர் உயர்தர் மகளிர் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற இவர் அங்கு தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் இசையை மாணவர்களுக்கு ஊட்டினார் என்றால் அது மிகையாகாது. அதன் பின்னர் இவர் கற்ற, கற்பித்த கரவை திரு இதயக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார்.

காலமெலாம் இசைக் காதலிலே ஊறிய எம். எஸ். சுப்புலட்சுமி

சங்கீத வித்வத் சபை:

அது சாதாரணமாக சங்கீத வித்துவான்கள் தமது திறமையை எடுத்துக்காட்டும் சபாமட்டுமல்ல! அது பாடகனின் குரல்வளம், இனிமை, கனிவு, ஞானம், கற்பனை, ராகவிஸ்தாரம், லயவிவகாரம் போன்ற சகல அம்சங்களையும் மிக நயமாகவும் வெகுநுட்பமாகவும் மதிப்பிடும் பெரும் மேதைகள், விற்பன்னர்கள், இசைச் சிம்மங்கள் நிறைந்துள்ள மாபெரும் இசை மண்டலம்.

அத்தகைய சங்கீத வித்வ சபையிலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட சங்கீத ரத்னாகரம் அரியக்குட்டி ராமானுஜ ஐயங்கார் பாட வேண்டிய நேரம் அது; தென்னாட்டின் உன்னதமான கர்நாடக இசைச் சிம்மமாக விளங்கிய ஐயங்கார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ஒரு நிலை; எனவே நிகழ்ச்சியில் தொய்வு ஏற்பாடாமல் இருப்பதற்காக அவ்வித்வத் சபையின் முன்னாள் செயலாளர் ஈ.கிருஷ்ணய்யரின் சிபார்சின் பேரில், மதுரை வீணை சண்முகவடிவு என்பவரின் மகளான, இளம் பாடகி குமாரி எம்.எஸ். சுப்புலட்சுமியை அன்றைய கச்சேரிக்கு ஒழுங்கு செய்திருந்தனர். ரசிகர்களும், இசை விமர்சகர்களும் வித்வான்களும் இசை மேதைகளும் நிறைந்த சபையில், அனுபவமில்லாத இளம் பாடகி, முகம் தெரிந்த ஒரு சில இசைஞானம் மிக்க மேதைகள் மத்தியில் தாய் சண்முகவடிவு தம்பூரா மீட்ட பாட ஆரம்பித்தார். தன்னை மறந்து இசை உலக சஞ்சாரத்துள் சபையையே இழுத்துச் சென்றுவிட்ட பாடகியின் இசை அற்புதத்தை என்னவென்பது!

போதிய அனுபவமோ, பயிற்சியோ இல்லாத 16 வயதேயான இளம் பாடகி அதுவும் இந்நாள்வரை ஆண்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்த இந்தச் சங்கீத மேடையில் "இளம் யுவதி' என்ன பாடப் போகிறாளென அயர்ச்சியுற்றிருந்த சபை, மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் இனிய கானம் காதில் இசைக்கவும், மூக்கின் மேல் விரல் வைத்து, ஆர்வத்துடன் இவரின் இசையமுதைப் பருக, இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, உசாராகியது. தன் இனிய தெய்வீக கானத்தால் சபையை மூன்று மணி நேரத்திற்கு அப்படியே பிரமித்துப்போய் இசைத் தேனில் மூழ்க வைத்துவிட்டார் அந்த இளம் பாடகி.

சபையிலே இருந்த காயன கந்தர்வ சங்கீத சாம்ராட் மகா வித்வான் செம்மை வைத்தியநாத பாகவதர், கச்சேரியைப் புகழ்ந்து "பேஷ் பேஷ் சபாஷ்!! ' எனப் பாராட்டியபடி முன்னே வந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தமையும், டைகர் வரதாச்சாரியார், ஹரிகேச நல்லூர் முத்தையாபாகவதர், வீணை வித்வான் சாம்பசிவ ஐயர் போன்ற சங்கீத மேதைகளில் மெய் சிலிர்த்த ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் அவரை மென் மேலும் இத்துறையில் உழைக்க ஊக்கம் கொடுத்தன. இசை மாமேதைகள் பிரமிப்படையும் வண்ணம் இவ் இளம் வயதில் தன் இனிய தேவகானத்தால் கட்டிப் போட்டு விட்ட குமாரி எம். எஸ். சுப்புலட்சுமி, வீணை வித்வான்கள் பலரால் பாராட்டப்பட்ட இசைப்பாரம்பரியம் மிக்க வீணை வித்துவாட்டி சண்முகவடிவின் மகளாக 1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி மதுரை மேல அநுமந்தராயன் வீதியிலிருந்த வீட்டில் பிறந்தார்.

இவரது தந்தையார் வழக்கறிஞரும் இசையிலே லயிப்புற்ற கலா ரசிகருமான திரு சுப்பிரமணிய ஐயராவார். வீணை சண்டமுகவடிவின் தாயார் அக்கம்மாள் பிடில் வாசிப்பதில் திறமையுள்ளவராகவும் தந்தையார் சுவாமிநாதன் மிகச் சிறந்த இசை ரசிகராகவும் பரம்பரை பரம்பரையாகவே இசையை ஆராதித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இளமையிலே எம்.எஸ். அவர்களை குஞ்சம்மா என்றே அழைத்தனர். குஞ்சம்மாவுக்கு சக்திவேல் என்றொரு அண்ணனும் வடிவாம்பாள் என்றொரு தங்கையும் உடன் பிறந்தவர்கள். தாய் சண்முகவடிவிடமே வீணை கற்ற குஞ்சம்மாள் தாயாரின் குருவான வீணை தனம்மாளின் அறிவுரைப்படி மதுரை ஸ்ரீநிவாச ஐயங்காரிடம் முறையாக வாய்ப்பாட்டு இசையைக் கற்கத் தொடங்கி மிகத் திறமையாகக் கற்று வந்தாள்.

கும்பகோணத்திலே மகாமகத் திருவிழா வெகு கோலாகலமாக இடம்பெற்றபோது, இதற்கு முன் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிகளுக்குமே இல்லாத வரவேற்புக் கிடைத்தது. இரு தடவைகள் (Once more) திரும்பவும் பாடும்படி மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து ரசித்த சிறப்பும் இடம்பெற்றது. தனது மதுரகானத்தால் மக்களை ஆகர்ஷித்து மனதில் இசை எழுச்சியை ஏற்படுத்திய பெருமை இந்தியாவின் இசைப் பொக்கிஷமாகத் திகழ்ந்த செல்வி குஞ்சம்மா என்ற எம்.எம். சுப்புலட்சுமியையே சாரும். மக்கள் பெரு வெள்ளமாகத் திரண்டிருந்த இம் மகாமகத் திருவிழாவிலே காந்தீயவாதியான டி. சதாசிவமென்பவர் கதர்த் துணி விற்பனையில் அமோகமாக ஈடுட்டிருந்தார். இவரும் சினிமா இயக்குநரான கே. சுப்பிரமணியம் என்பவரும் அப் பெண்மணியின் இசையில் பெரிதும் மயங்கி இத்தகைய இனிய கீதத்தை சகல மக்களும் ரசிக்கும் வகையில் சினிமா மூலம் வெளிக்கொணர வேண்டுமெனப் பெரிதும் முயன்றனர். எம்.எஸ்.சின் இசையால் சினிமா உலகமே பெரும் உந்து சக்தி பெற்று கம்பீரநடை போடுகின்ற இவர்களின் கணக்கெடுப்பு சிறிது பிசிறும் இன்றி வெற்றிவாகை சூடியது.

பிரேம்சந்த் என்ற புனை பெயரைத் தாங்கிய தன்பத்ராய் என்பவர் முதலில் உருதுவில் எழுதிப் பின் இந்தியில் மொழி பெயர்த்த சேவாசதன்' என்ற நாவலை எஸ். அம்புஜம்மாள் என்ற சமூக சேவகி தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிட்டார். இரண்டாம் தாரமாக மணம் முடித்து வாழ்வில் சிக்கலுற்றுத் தேச சேவைக்கே தன்னை அர்ப்பணிக்கும் பெண்ணை மையமாகக் கொண்ட இந் நாவலை இயக்குநர் சுப்பிரமணியம் சினிமாத்திரையில் ஏற்றியபோது, அதன் கதாநாயகியாக எம்.எஸ். அவர்களே தோன்றிப், பாடியும், நடித்தும் பெரும் புகழ் ஈட்டிக் கலைவானில், ஒளிவிடும் நட்சத்திரமாக பிரகாசிக்கத் தொடங்கினார்.

இவரின் வரவால் சினிமாத்துறை "ஓகோ' எனக்களைகட்டவே பலருடைய வற்புறுத்தலின் பேரிலும் சதாசிவத்தின் தயாரிப்பின் பேரிலும் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் ஜி.என்.பி. துஷ்யந்தனாக நடிக்க இவர் சகுந்தலையின் பாத்திரமேற்று நடித்து தன்னுடைய கலைத்திறனுக்கெல்லாம் முத்திரை பதித்துக் கொண்டார். தொடர்ந்து சத்தியவான் சாவித்திரி படத்தில் நாரதராகவும் மீரா படத்தில் பக்த மீராவாகவும் பாத்திரமேற்று மக்கள் மனதைத் தன் நடிப்பாலும் இசையாலும் கிறங்கடித்து மயங்க வைத்தார். இத்தனை திறமைகளும், மிகச் சாதாரண கீழ்மட்ட மக்கள் மத்தியில் தேவதாசிக் குலத்திலிருந்து வந்த பெண்ணிடம், பொதிந்து கிடந்ததே என எண்ணியெண்ணி மக்கள் வியந்தனர். வானளாவிய புகழும் பெருமையும் கீர்த்தியும் அவரைச் சூழ்ந்து படையெடுத்தாலும் எம்.எஸ். அவர்கள் மிக எளிமையாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும், வெகு அடக்கமாகவும், இசையோடு இணங்கும் போதெல்லாம் வெகு உருக்கமாகவும் அன்பாகவுமே தோற்றமளித்தார். கானத்தின் இனிமையால் இவர் தெய்வீகப் பொலிவு நிறைந்து விளங்கினார்.

இசையுலகில் பெரும் கவனிப்பை ஈர்த்துவிட்ட எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பம்பாயில் ஒரு இசை நிழ்ச்சி காத்திருந்த வேளையில் இவருக்கு வயலின் வாசிக்க உடன்பட்டிருந்த கலைஞர், ஒரு பெண்ணுக்கு தான் வயலின் வாசிப்பதா என மறுத்து விட்டார். பக்கவாத்தியம் இல்லாமல் எப்படி நிகழ்ச்சியை நடத்துவதென யோசித்துத் துயருற்றிருந்த வேளையில் பத்திரிகையாளரும் தேச பக்தருமான சதாசிவம் அவர்களே இவருக்கு துணையாக பம்பாய் சென்றதோடு, பெண் பாடகிக்கு வயலின் வாசிப்பதை மரியாதைக் குறைவானது எனக் கச்சேரியையே ஒதுக்கி வைத்த, கோவிந்தராஜபிள்ளை என்பவருக்கு பதிலாக, பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோவின் இசையமைப்பாளராகவும் முன்னாளில் பம்பாய் சினிமா ஸ்டூடியோவின் வயலின் கலைஞராகவுமிருந்த பரூர் எஸ். அனந்தராமய்யரே, பின்னணி இசைக்க வைத்தார். கச்சேரி திறம்பட நடைபெற்றது. தனது உழைப்பாலும், இறைவன் அருளிய இசைக் கொடையாலும், உலகப் புகழ்பெற்ற இசைமேதையாகப் பலராலும் பாராட்டப்பட்டாலும் கூட இவர்களுடைய வாழ்வு மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையாயிருந்ததென்பதையும் நாம் மனங்கொள்ளவேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ ஐயர் மங்களம்மா தம்பதியின் மூன்றாவது மகனான சதாசிவத்தை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்ட இசை அரசி தன் வாழ்வு முழுவதையுமே அவரிடம் அர்ப்பணித்துத் தன் இசை வளர்ச்சிக்குத் துணை தேடிக் கொண்டார். திரு. சதாசிவத்திற்கு முதல் மனைவி மூலம் ராதா, விஜயா என இரு பெண்கள் உளர். இவர்களும் இசை வல்லுனர்களாக இருந்தபோதும் ராதாவே அம்மாவுடன் பிற்காலத்தில் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இசையரசி நடித்த சேவாசதனம் சகுந்தலை என்ற திரைபடங்களால் கிடைத்த பணத்தைக் கொண்டே கல்கி சஞ்சிகை கம்பனி தொடங்கப் பெற்று மலர்ச்சி பெற்றது. அநாதை நிலையங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், கட்டிடங்களுக்கான நிதிகள், நினைவு மண்டபங்கள், நினைவு சிலைகள், ராம கிருஷ்ணமிஷன், சங்கீத வித்வச் சபை, கஸ்தூரிபா காந்தி நிலையம், அமெரிக்காவின் உள்ள பிற்ஸ்பர்க் ஆலயம் உட்பட பல்வேறுபட்ட ஆலய நிதிகளுக்காக என பல கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற நிதிக் கச்சேரிகளை நடத்தி இந்திய சமுதாயத்திற்கே பெரும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அவருடைய திறமையையும் மேதைமையையும் ஒழுங்காகத் திட்டமிட்டு வழி நடத்தி இத்தகைய பெருந்தொகையான பண வருவாயையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் ஒழுங்கான முறையில் அவற்றிற்கு கணக்கு வைத்துச் சரியாக அவற்றைப் பயன்படுத்த அவரது துணைவர் செய்த சேவையும் அர்ப்பணிப்பும் தியாகமும் கூட இச் சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூரத் தக்கது.

தன் குரலிலே வீணை இசையைக் குடியிருத்தியுள்ளாள் என இசை மேதை சாம்பசிவ ஐயரால் பாராட்டுப் பெற்ற இம் மேதை ஐம்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்து யாழ். விவேகானந்தா வித்தியாலய கட்டிட நிதிக்காக இசைக் கச்சேரி செய்த போது "இராம நந்து புரோவா' என்ற தோடி ராக வர்ணத்தை உருக்கமாக இசைத்தார். இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா, நித்திரையில் வந்து என்ற பாடல்களையெல்லாம் பட்டிதொட்டியெல்லாம் கேட்க முடிந்தது. பாபநாச சிவம் இயற்றிய ""கதிர் காமக் கந்தன் கழலினைப் பணிமனமே'' என்ற காம்போதிராகப் பாடலும் இவருடைய தெய்வீகக் குரலில் மக்களை மகேசனருகே அழைத்துச் சென்றது. பத்மபூஷன், ""பாரதரத்னா'' எனப் பல உயர் பட்டங்களுக்கும் பெருமை தேடிக் கொடுத்த இந்த இசை மேதை 1962 இல் ஐக்கிய நாடுகள் சங்கத்தில் ராஜாஜி இயற்றிய ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடி பெரும் கரகோஷத்தைப் பெற்றார்.

சங்கீத அக்கடமி, ரவீந்திரநாதரின் பாரதி பல்கலைக்கழகம், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், டொல்கி பல்கலைக்கழகம் ஆகியன இவருக்கு டாக்டர் பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளன. ஏராளமான பட்டங்களையும் கௌரவங்களையும் பணமுடிச்சுகளையும் பெற்றுக் கொண்ட இவர், சிறிதும் சலனமின்றி அவற்றையெல்லாம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமேயான உடைமைகளென ஆக்கிக் கொண்டார்.1974 இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான மக்காசாய் விருதை பெரும் பண முடிப்போடு பெற்றுக்கொண்ட இவருக்கு இன்னும் பல நாடுகளிலிருந்து விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்தன. 1982 இல் லண்டனில் பரதக்கலை விழாவை றோயல் ஆர்ட் மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படியே 77 இல் பிட்ன்பர்க்கிற்கும் 87 இல் மாஸ்கோவிற்கும் இசைப் பயணம் சென்று வந்தார். கெய்ரோவில் இவரது இசையைப் கேட்டு மயங்கிய உம்குல்தூம் என்ற புகழ் பெற்ற பிரபல பாடகி இவரை கட்டித் தழுவி, தன் பாராட்டைக் கைப்படவே எழுதி வழங்கினார். இப்படிப்பட்ட மாமேதை இன்று நம்மிடையே இல்லையே என்ற ஏக்கம் என்றும் எம்மை வருத்திக் கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமேயில்லை.

வியாழன், 3 நவம்பர், 2011

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்

கர்நாடக இசை உலகில் சங்கீத மும்மணிகள் எனச் சிறப்பித்துக் கூறப்படும் வாக்கேயக்காரர்களில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளும் ஒருவர். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்திகளுமே சோழவள நாட்டுத் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது ஓர் அதிசயமே. இவர் சித்திரபானு வருடம், சித்திரை மாதம் 17ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரம், திங்கட்கிழமை (26.4.1762) அன்று பிறந்தார். பிறந்த நட்சத்திரத்தை அநுசரித்து இவருக்கு பெற்றோரால் வெங்கட சுப்பிரமண்யன் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும் செல்லமாக சியாமகிருஷ்ணன் என்றே அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே பின்னால் நிலைத்துவிட்டது.

இவரது முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து வந்து காஞ்சியில் குடியேறிய வடதேசத்து வடமாளைச் சேர்ந்தவர்கள். காஞ்சி க்ஷேத்திரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயத்தில், பிரம்ம தேவர் தவம் செய்து தேவியின் அனுக்கிரகத்தைப் பெற்று அங்கு பங்காரு காமாக்ஷியை ஸ்தாபிதம் செய்தார். அத்திரு உருவம் துர்வாஸ முனிவரால் பூஜிக்கப்பட்டதாகவும் ஐதீகம் உள்ளது. ஸ்ரீ ஆதிசங்கரர் காஞ்சித் தலத்திற்கு விஜயம் செய்தபோது ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்தை விரிவுபடுத்தி புனருத்தாரணம் செய்து பங்காரு காமாக்ஷிக்கு ஆகம விதிப்படி பூஜை நடத்தி வர சியாமா சாஸ்திரிகளின் முன்னோர் ஒருவரை நியமித்தார். அதிலிருந்து அக்குடும்பத்தவரே பங்காரு காமாக்ஷிக்குப் பரம்பரையாக பூஜை செய்து வருகிறார்கள். பாரதத்தின் மீது படையெடுத்துக் கோயில்களை நாசப்படுத்தி, கொள்ளையடித்த அந்நியர்கள் காஞ்சியை நோக்கி வந்தபோது, சாஸ்திரிகளின் குடும்பம் பங்காரு காமாக்ஷியின் விக்ரஹத்துடன், தெற்கு நோக்கிப் புறப்பட்டது. செஞ்சி, உடையார்பாளையம், விஜயபுரம் முதலிய சமஸ்தானங்களில் சில காலம் இருந்துவிட்டு 1781ஆம் ஆண்டு தஞ்சாவூர் வந்து இரண்டாம் துளஜாஜி மன்னரின் ஆதரவில் தங்கினார்கள். 1785ஆம் ஆண்டு பங்காரு காமாக்ஷி அம்மனுக்குக் கோயில் கட்டப்பட்டு வழக்கமான முறையில் பூஜைகள் தொடங்கி நடத்தப்பட்டன.

சியாமா சாஸ்திரிகளின் முன்னோர்கள் யாரும் சங்கீத வித்வான்களாக இருந்ததாகத் தெரியவில்லை. சிறுவயது முதலே சியாமா சாஸ்திரிகள் ஸமஸ்க்ருதம், தெலுங்கு இவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது 18ஆவது வயதில் திருவாரூரில் தங்கி இருந்த பெற்றோர், தஞ்சைக்குக் குடிபெயர்ந்தார்கள். தனது தாய்மாமனிடம் சிறிதுகாலம் சங்கீதப் பயிற்சி பெற்றார் சாஸ்திரிகள்.

பின்னொரு நாள், தமது அபார சங்கீத ஞானத்தால் சங்கீத ஸ்வாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த யதிசிரேஷ்டர் ஒருவர் தஞ்சைக்கு விஜயம் செய்தார். சாதுர் மாஸ்யத்தை முன்னிட்டு அவர் நான்கு மாத காலம் அங்கேயே தங்க நேரிட்டது. சாஸ்திரிகளின் தந்தை விஸ்வநாத ஐயர் அவரை ஒரு நாள் தம் இல்லத்திற்கு ‘பிக்ஷை’க்கு அழைத்தார்.

பிக்ஷை முடிந்து, புறப்பட இருந்தபோது சிறுவன் சியாமா சாஸ்திரிகளை அவர் உற்று நோக்கினார். ‘உத்தமமான சிஷ்யர் ஒருவர் நமக்குக் கிடைத்தார்’ என அவர் மனத்தில் தோன்றிவிட்டது. சிறுவனைத் தாம் தங்கியிருந்த இடத்துக்குத் தினமும் வரச்சொல்லி சாஸ்த்ரீய, சங்கீதத்தின் தத்துவங்களை, தாள கதி, நடை பேதங்களின் கிரமங்கள், மற்றும் பிரஸ்தாரங்களின் நுட்பங்களை விரிவாகக் கற்றுக்கொடுத்தார். தஞ்சையைவிட்டுப் புறப்படுமுன் தன்னிடமிருந்த அரிய இசைச் சுவடிகளை, சியாம கிருஷ்ணரிடம் கொடுத்து ‘பச்சிமிரியம் ஆதியப்பய்யரிடம் சென்று சங்கீதம் கற்றுக்கொள்ள’ என்று உபதேசித்து அருளினார்.

தஞ்சை சமஸ்தான வித்வானாக இருந்த ஆதியப்பய்யர் ‘தானவர்ணமார்க்க தரிசி’ என்ற பிருதுவுடன் விளங்கியவர். சியாமா சாஸ்திரிகளை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு சங்கீதத்தின் அதிநுட்பமான விஷயங்களையும், ராகங்கள், கமகங்களின் மர்மங்களையும் அடிக்கடிப் பாடியும், வீணையில் இசைத்தும் கற்பித்தார். அதன் பிறகு சாஸ்திரிகள் தாமே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். அவை ஒவ்வொன்றும் ராக பாவம் ததும்பும் ரத்தினங்களாக அமைந்தன. ஸமஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றில் கிருதிகளை இயற்றிய அவர், தமிழிலும் பல உருப்படிகளை அமைத்துள்ளார். இவரது கிருதிகளின் அமைப்பு, தான வர்ணங்களின் நடைகள், ஸ்வர ஜதிகளின் மேம்பாடு ஆகியவற்றைக் கேட்டு வித்வான்கள் பெரிதும் பாராட்டினார்கள். தெய்வப் புலமைமிக்க வாக்கேயக்காரர் எனப் பலரும் கொண்டாடினார்கள். இவரது புகழ் பல இடங்களிலும் பரவத் தொடங்கியது. மகனீயர் தியாகராஜ ஸ்வாமிகள் இவர் காலத்தவரே. திருவையாற்றில் அவர் இருந்தபோது சாஸ்திரிகள் அங்கு சென்று தான் இயற்றிய புதிய கிருதிகளைப் பாடிக்காட்டுவார். தியாகராஜ ஸ்வாமிகளும் சியாமா சாஸ்திரிகளும் சந்திக் கையில் பொழுதுபோவது தெரியாமல் சங்கீத விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பார்களாம். வெள்ளிக் கிழமைகள், பிற விசேஷ நாட்களில் சாஸ்திரிகள் பங்காரு காமாக்ஷியின் சன்னதியில் அமர்ந்து நெடுநேரம் தியானம் செய்வார். அவர் வாக்கினின்றும் பல கிருதிகள் வெள்ளம் போன்று அப்போது பிரவகிக்கும். ஒருமுறை அவர் புதுக்கோட்டை சென்றிருந்தபோது ஒரு பெரியவர் ‘தாங்கள் மதுரை சென்று ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் பெயரில் கிருதிகளை இயற்ற வேண்டும்’ எனக் கூறினார். சரியென்று சொன்ன சாஸ்திரிகள் நவரத்தின மாலிகை என்ற பெயரில் சில கிருதிகளை இயற்றிவிட்டுப் பிற்பாடு அதனை மறந்துவிட்டார். பிறகு ஒரு நாள் அவரது சொப்பனத்தில் அதே மனிதர் தோன்றி ‘சாஸ்திரிகளே மீனாக்ஷி அம்மனை மறந்துவிட்டீர்களா?’ எனக் கேட்டுவிட்டு மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த சாஸ்திரிகள் உடனேயே ஸ்ரீ மீனாக்ஷி அம்மனைத் தியானம் செய்து நவரத்ன மாலிகையைப் பூர்த்திசெய்தார்.

பின்னர் மதுரைக்குச் சென்று ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் சன்னதியில் அந்த நவரத்ன மாலிகையை பாடி தேவிக்குச் சமர்ப்பித் தார். அம்மன் முன் அமர்ந்து அவர் ‘ஸரோஜ தள நேத்ரி’ கிருதியிலிருந்து தொடங்கி நான்கு பாடல்களைப் பாடி முடித்தவரை அங்கிருந்தவர்கள் அவரைச் சியாமா சாஸ்திரிகள் என்று அறியவில்லை. யாரோ வித்வான் பாடுகிறார் என்றே எண்ணினார்கள். உடன் வந்திருந்த அலசூர் கிருஷ்ணய்யர் மூலம் அவர்தான் பிரசித்தி பெற்ற சியாமா சாஸ்திரிகள் என்று அறிந்துகொண்ட பிறகு, அவருக்கு கோவில் மரியாதைகள் செய்து கௌரவித்தார்கள். பிறகு அவர் தஞ்சை திரும்பினார். இன்றைக்கும் சியாமா சாஸ்திரிகள் குடும்பத்து வழி வந்தவர்களுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன.

65 வயது வாழ்ந்த சியாமா சாஸ்திரிகள் ‘பாலிஞ்சு காமாட்சி’ போன்று காமாக்ஷி அம்மன்மீதும், ஸ்ரீ மீனாக்ஷி அம்மன்மீது பாடிய நவரத்தின மாலிகா கிருதிகளும் தவிர திருவையாறு, திருவானைக்கோவில், நாகப்பட்டிணம் முதலிய ஸ்தலங்களுக்கும் சென்று அங்குள்ள அம்மன்கள்மீதும் பாடல்கள் இயற்றியிருக்கிறார். மொத்தம் இவர் இயற்றியது சுமார் 300 கிருதிகள் இருக்கும்.

ஒரு சமயம் தஞ்சை சமஸ்தானத்தில் ‘பூலோக சாப கட்டி பொப்பிலி கேசவையா’ என்ற வித்வானுடன் இவர் ஒரு சங்கீதப் போட்டியில் ஈடுபட நேர்ந்தது. கேசவையா, ஸிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். சாஸ்திரிகள் அதைக் கிரகித்து உடனே திரும்பப் பாடி, சரபநந்தன தாளத்தில் புதிதாக ஒரு பல்லவியை பாடி அந்தப் போட்டியில் வெற்றி ஈட்டினார். இவரது சிஷ்யர்களில் ஸ்ரீ ஸுப்பராய சாஸ்திரிகள், அலஸுர் கிருஷ்ணய்யர், நாதஸ்வர வித்வானான தாஸரி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

நன்றி: தெய்வீகப் பொருட்பக்கங்கள், டிசம்பர் 2001

மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா...இந்தப் பாடலை உச்சரிக்காத நா இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஒரு அருமையான பாடல். ஆனந்த பைரவி இராகத்தில் ஆரம்பமாகி அமைந்த ஒரு ராகமாலிகா. இந்தப் பாடலை பாடியவர் தென்னிந்திய பிரபல பின்னனிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். இதை எழுதியவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்....பாடல்

இன்றுதான் அவர் எம்மை பிரிந்த நாள் ( 08.10.2003 ) இசையுலகும் நடன உலகும் அதிர்ந்து நின்ற நாள். ஈழதேசம் மிகப்பெரிய ஒரு மஹாவித்துவானை இழந்த நாள். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் மூழ்கி அதிலிருந்து முத்துக்களை மட்டுமே எமக்கு தந்த இயலிசைவாரிதி மறைந்தநாள். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடல்கள் இயற்றுவதாகட்டும் எல்லாத்துறையிலும் தனது பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய சாகித்ய சாகரம் வீரமணி ஐயாவின் நினைவுதினப் பதிவு இது.

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இணுவையம்பதியில் 1931ம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி இந்த பூவுலகில் கால் பதித்தார். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். படிக்கும் காலத்திலேயே தன்னுடைய கலைத்திறமையை வெளிக்காட்டி மிகவும் ஆணித்தரமாக தன்னுடைய காலை கலை உலகில் பதித்தார். 1947 ம் ஆண்டு 16 வது வயதில் பாடசாலையில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் மனோகராநாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி பல முகபாவங்களை காட்டி நடித்தார். அரங்கத்தில் இருந்தோர் எல்லாம் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி அதிபர் உடனேயே அலுவலகத்திற்கு சென்று சகல துறைகளிலும் மிளிர்ந்த மாணவன்என்ற ஒரு வெள்ளிப்பதக்கத்தை அந்த மேடையிலேயே வீரமணி அய்யாவிற்கு சூட்டி மகிழ்ந்தார். வளர்ந்து பட்டப்படிப்புக்காக சென்னை வந்தார். விஞ்ஞான மானி பட்டம் படிக்கவே வந்தார். ஆனால் புலன்கள் எல்லாம் இசையிலும் நடனத்திலும் சென்றது. உலகமே போற்றும் இசை மேதை பாபநாசம் சிவன் மற்றும் எம்.டி. இராமநாதன் ஆகியோரை தனது இசைக்கான குருவாகவும்,கலாஷேத்திரத்தில் புகழ்பூத்த நாட்டிய மேதை ஸ்ரீமதி ருக்மிணி தேவி அருண்டேல், சாரதா ஆகியோரை நாட்டியத்துக்கான குருவாகவும் வரித்து கொண்டு இசையிலும், நடனத்திலும் தனது திறனை செவ்வனே வெளிப்படுத்தினார்.

சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயா

இவ்வண்ணம் பயின்று வரும் காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வர ஆலய கற்பாகம்பாள் மீது கொண்ட பக்தி காரணமாக உருவானதுதான் கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..என்ற சாகித்தியம். மிகப்பிரபல்யமான ஒரு பாடல். வெளிவந்த ஆண்டு 1956. ரி.எம்.எஸ் அவர்களின் குரல் கேட்பவரை நெகிழச்செய்யும். இந்தப் பாடலிற்கு வயலின் வாசித்தவர் உலகம் போற்றும் குன்னக்குடி வைத்தியநாதன். இவ்வளவு காலமாகியும் பாடல் இன்றுவரை இதயத்துள் கூடாரமிட்டு ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு முறை வானொலிஅறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். நீங்கள் இயற்றிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ரி.எம்.எஸ் பாடிய எத்தனையோ பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன், ஏன் நீங்கள் இயற்றிய இந்தப்பாடல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று. வீரமணி ஐயா அவர்கள் ஒரு கணம் ஆடிப்போனார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சொன்னாராம் இவ்வாறு...நான் அந்தப் பாடலை இயற்றி என்னுடைய குருநாதர் பாபநாசம் சிவனிடம் காட்டினேன். அவரும் ராகத்திற்கு ஏற்றாற்போல் பாடிப் பார்த்துவிட்டு... சிற்பம் நிறைந்த சிங்கார கோயில் கொண்ட...என்ற வரியில் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டது போன்ற உணர்வு வருகிறது. நான் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க பாபநாசம் சிவன் அவர்கள்சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட..என்று உயர்என்ற சொல்லை சேர்த்தார். சேர்த்த அந்த உயர் என்ற சொல்லால் பாடலை யாத்த எனக்கு உயர்வைத் தந்தது. பாடலைப் பாடிய ரி.எம்.எஸ் ற்கு உயர்வைத்தந்தது. பாடலுக்கு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உயர்வைத்தந்தது”. குருவின் அந்த ஆசீர்வாதமே அவரை இந்தப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. இதனை இளையதம்பி தயானந்தாவின் வானலையின் வரிகள்என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது சொல்லி மகிழ்ந்தார். நேரடியாகவே என் காது பட கேட்டேன். அநேகமாக அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி விழாவாக இருந்திருக்க வேண்டும்.

டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தம் கைப்பட வீரமணி ஐயர் பற்றி எழுதியது

வீரமணி ஐயா அவர்கள் பலதுறை கலைஞர். இசையாகட்டும், நடனமாகட்டும்,பாடலாக்கம் ஆகட்டும் இவர் இறுதிக்காலம் வரை அதில் புதுமைகளை செய்து கொண்டு இருந்தார். நடனத்தில் புதிய புதிய முத்திரைகளை உருவாக்குவதிலும்,இசையில் புதிய ராகங்கள், சாகித்தியங்கள் இயற்றுவதிலும், இராகங்களுக்கு பாடல்கள் இயற்றுவதிலும், கோவில்களுக்கு பாடல்கள் என அவர் எப்பொழுதும் தான் சார்ந்த கலைக்கு தொண்டாற்றி கொண்டே இருந்திருக்கிறார். இராகங்களுக்கு பாடல் இயற்றுவதை தமிழில் வாக்கேயகாரர்என்று சொல்லுவார்களாம். யாழ்ப்பாணம் தந்த மிகப்பெரும் வாக்கேயகாரரை நாம் இழந்து இற்றைக்கு 6வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடக இசையிலே 72 மேளகர்த்தா ராகங்களுக்கான பாடல்கள் இயற்றி இசை உலகை தன்பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தார். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர்,போன்ற சிலரே. இதனால்தான் இவர்பால் அனைவர் கண்ணும் திரும்பியது.

கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா வீரமணி ஐயர் பற்றி அனுப்பிய வாழ்த்து

கர்நாடக சங்கீத உலகில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு சகாப்தம். அவர்கள் ஒருமுறை 1980 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த போது இவரது வாக்கேயகாரத் திறனை அறிந்து வியந்து நாலு சுரத்தில் இராகம் அமைத்துப் பாடமுடியுமா என கேட்டார். அடுத்த கணமே வீரமணி ஐயா ஸகமநிஸஎன்ற ஆரோகணத்தையும் ஸநிமகஸஅவரோகணத்தையும் கொண்ட ஜெயம்என்ற இராகத்தை உடனேயே ஆக்கி ஆதி தாளத்தில் ஜெயமருள்வாய் ஜெகதீஸ்வரா / ஜெயகௌரி மணாளா - தயாளாஎன்ற கீர்த்தனையை உடனேஇயற்றினார். வாயடைத்து நின்ற பாலமுரளிகிருஷ்ணா பாராட்டுப்பத்திரம் வழங்கி விட்டு சென்றார்.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரமணி ஐயர் பற்றி இயற்றிய வெண்பா

தான் ஒரு மேம்பட்ட கலைஞன் என்று அவருக்கு வித்துவச்செருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பரராஜசேகரப்பிள்ளையார் வீதியில் ஆடி மகிழ்வார். அவர்களை கைகளால் தாளம் போட வைத்து ஆட்டுவித்து மகிழ்வார். இதைவிட பெரிய பண்பு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தன்மை. சக கலைஞனை மதிக்கும் தன்மை. நான் தான். தான் தான். என்ற மமதை அற்ற மாமனிதர். இதற்கு சிறந்த உதாரணமாக,இவர் தொடர்பாக நல்லூர் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் பாலமுருகன்அவர்களுடன் உரையாடிய சமயம் அவர் பகிர்ந்து கொண்டது. ஒருநாள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி மற்றும் உதயநாதன் குழுவினருடன் பாலமுருகனும் வாசித்து கொண்டிருந்தார்.கனகாங்கிஇராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாராம். அந்த இராகத்துக்கான கீர்த்தனை தொடர்பான சகல நெளிவு சுளிவுகளை முன்னரே வீரமணி ஐயா அவர்களிடம் படித்திருந்தார் பாலமுருகன். அன்று அந்த கடினமான இராகத்தை வாசித்து கொண்டு இருக்க, திடீரென ஆலயத்துக்குள் குளித்து உடல் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட வீரமணி ஐயா நுழைந்து கையில் கொண்டு வந்த ஒரு பதக்கத்தை பாலமுருகனுக்கு அணிவித்து விநாயகரில் சாத்தி இருந்த அறுகம்புல் எடுத்து கையில் கொடுத்து.. நீ நீடுழி வாழணும் நல்லா இருக்கணும்டா கண்ணா, இன்னும் இன்னும் நிறைய வாசித்து புகழ் அடையணும்” (அவர் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அவரோடு பழகியவர்கள்) என்று வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டும் நீங்கிவிட்டார். அந்த நாதஸ்வர இசை அவரை ஈர்த்துவிட்டது. அடடா இப்படி வாசிக்கிறானே என்று தான் நின்ற கோலத்தையும் மறந்து ஈர வேட்டியுடன் வந்து வாழ்த்திய பண்பு எந்தக் கலைஞனுக்கும் வராது. கலைஞனை அவனது நிகழ்ச்சி முடியும் முன்னர் வாழ்த்துவது அல்லது விமர்சிப்பது என்பது அந்தக் கலைஞன ஊக்கபடுத்துவதோடல்லமால் மேன்மேலும் வளர உதவும். அந்த வாழ்த்திய தருணத்தை கண்டு பாலமுருகன் திகைத்து போனாராம். இன்றும் அதை நினைக்கும் போது நெகிழ்ந்தும் உணர்ச்சி வசப்பட்டும் போய்விடுகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம். இங்கே அவற்றை தருவதற்கு போதிய இடம் இல்லை. ஆனால் அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் சிறுமைப்படுத்தி விட்டது என்று என்னுடைய சிற்றறிவு சொல்கிறது. அவரை சிறுமைப்படுத்தி தன்னையே தாழ்த்திக் கொண்டு விட்டது. காரணம் உலகம் போற்றுகின்ற ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1999 ம் ஆண்டு வெறும் கௌரவ முதுகலைமாணி(M.A) பட்டம் மட்டுமே வழங்கியிருந்தது. என்னைப் பொறுத்த வரை, எந்தவிதத்தில் அவர் குறைந்தவர் கலாநிதிபட்டம் பெறுவதற்கு என தெரியவில்லை. இதே அடிப்படையில் கௌரவிக்கப்படாத ஒரு கலைஞன் அளவெட்டி நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே பத்மநாதன். அவர் இறந்த பின்னர் அவருக்கு அந்த கலாநிதி பட்டத்தை வழங்கி மேலும் ஒரு முறை தான் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன் என்று நிரூபித்தது. நான் சிந்திப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.

2002 ம் ஆண்டளவில் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த வீரமணி ஐயர் அவர்கள் மெய்மறந்து அந்த நிகழ்ச்சியினை ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுசரனையாளர்களாக இருந்த இலங்கை வங்கியினர் தமது வங்கி பற்றி ஒரு பாடலை எழுதித்தருமாறு கேட்டனர். நீங்கள் எழுதித்தந்தால் தாங்கள் அதனை நித்யஸ்ரீ மூலம் பாடுவிப்போம் என்று கூற, வீரமணி ஐயரும் தமக்கே உரித்தான விதத்தில் உடனடியாக பாடலை எழுதிக்கொடுத்தார். நித்யஸ்ரீ அவர்களும் சவாலாக எடுத்து அதனை மேடையிலேயே உடனே பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதுதான் வீரமணி ஐயா. சீர்காழி அவர்களுடன் சுட்டிபுரம் அம்மன் கோவிலில்நிகழ்ச்சிக்காக சென்ற போது காருக்குள்ளேயே பாடல் எழுத அதனை சீர்காழி மேடையில் பாடினார். இப்படியான நிகழ்வுகள் ஐயா அவர்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தது.

ஒரு கலைஞனை கௌரவிக்கும் பண்பு வளர்ந்து சென்றால் கலைகள் காக்கப்படும். அதனை பலரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இப்படியான நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். 1971 காலப்பகுதிகளில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நடனம், இசை, சித்திரம் என்பன சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தி அதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வீரமணி ஐயா என்று யாழ்ப்பாணப் பல்கலைகழக சமஸ்கிருதத் துறை தலைவர் கலாநிதி.வி.சிவசாமி ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடைசிவரை தான் சார்ந்த கலைகளை தன் தாய்மண்ணிலே பரப்புவதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருந்தார். இன்றும் அவற்றை அவருடைய துணைவியார் ஸ்ரீமதி சுசீலாதேவி தனித்து நின்று செய்து கொண்டு இருக்கிறார்.

அழகு தமிழில் புகுந்து விளையாடி அற்புதமான படைப்புக்களை தந்ததோடுமட்டுமல்லாமல் நடனத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தை அமைத்து அந்த பாதையில் நிறைய மாணாக்கர்களை பயணிக்கவைத்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு அரும்பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் வழி வந்த பலர் இன்றும் பேரும் புகழோடும் இசையுலகில் இருக்கின்றார்கள் என்பது ஐயா அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய புகழே. சாகித்திய சாகரம் இன்று எம்மோடு இல்லை. அவர்களை நினைவு கூர்ந்து அவரது படைப்புக்களை நாம் பேணிப் பாதுகாத்து அதனை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு நேரத்தில் அவர்களது பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் தவிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. அப்படி ஒரு பாடலை பாடி மேடையை அலங்கரிப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல் என்றும் தெரியவில்லை. நாமே அவற்றை வளர்ப்பதற்கு முன்னிற்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த விடயத்தை வட-இலங்கை சங்கீத சபையினருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வீரமணி ஐயா பற்றி குறிப்பிடுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் பதிவு நீண்டு விடும் என்ற காரணம் ஒருபக்கம் இருக்கிறது. மீண்டும் ஒருதடவை ஒரு அந்தப் பெரும் கலைஞனை மனதிலே போற்றி, மண்ணிலே கலை வளர்க்க எம்மாலான காரியங்களை செய்வோம் என இந்நாளில் உறுதி எடுத்து இயங்குவோமாக.

வாழ்க ஐயா நாமம்..!! வளர்க அவர் புகழ் !!!

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர் , வசந்தி வைத்திலிங்கம்,பூலோகநாதன் கோகுலன்